விஜய் கட்சியின் 108 உறுப்பினர்களும் இராஜினாமா செய்தால் என்ன நடக்கும்?

விஜய் கட்சியின் 108 உறுப்பினர்களும் இராஜினாமா செய்தால் என்ன நடக்கும்?

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ஆம் திகதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4-ஆம் திகதி எண்ணப்பட்டன. 

இதில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. 

தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 

தமிழக வெற்றிக்கழகம் தேர்தலில் வெற்றி பெற்றாலும், ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 

ஏற்கனவே த.வெ.கவுக்கு காங்கிரஸ் ஆதரவு வழங்கியுள்ளது. 

இந்நிலையில் வி.சி.க, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளிடம் தனித்தனியே த.வெ.க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

இந்த சூழலில், த.வெ.க. தலைவர் விஜய் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகரை சந்தித்தார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கிய விஜய், தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்காக உரிமை கோரினார். 

ஆட்சியமைக்க ஆளுநர் அர்லேகர் அழைப்பு விடுத்த பிறகு, தமிழக முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்பார் என தகவல் தெரிவித்தது. எனினும், விஜய்யை ஆட்சியமைக்க வரும்படி ஆளுநர் அழைக்கவில்லை. 

ஆட்சியமைக்க தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் வரும்படி ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார் என கூறப்படுகிறது. 

அப்படி பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் விஜய் வராத சூழலில் அவரை ஆட்சியமைக்க வரும்படி ஆளுநர் அழைக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

த.வெ.க., தனிப்பெரும் கட்சியாக உள்ளபோதும், அக்கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காதது சர்ச்சையானது. 

இந்த நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், 118 இடங்கள் இல்லாமல் ஆட்சி அமைக்க அழைக்க முடியாது. 

118 எம்.எல்.ஏ.க்களை கண்முன் நிறுத்துங்கள் என்று நான் கூறவில்லை. விஜய் மெஜாரிட்டி எண்ணுடன் வந்தால் ஆட்சி அமைக்க அழைக்க தயார் என்று கூறினார். 

ஆனால் விஜய்யிடம் அந்த பெரும்பான்மையும் இல்லை. விஜய் ஆட்சி அமைப்பதை நான் தடுப்பதாக எப்படி சொல்ல முடியும்? விஜய்யை ஆட்சி அமைக்க அழைப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. 

அடுத்த 2 அல்லது 3 நாட்களில் முடிவு எட்டப்படாவிட்டால் அடுத்த கட்ட முடிவுகள் குறித்து ஆலோசிப்பேன். தி.மு.க. - அ.தி.மு.க. சேர்ந்து ஆட்சி அமைக்க உரிமை கோரினாலும் சாத்தியம்தான் என்று கூறினார். 

தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது என முன்பு, தகவல் ஒன்று வெளியானது. 

இதனை தொடர்ந்து, அ.தி.மு.க.வுக்கு தேவையான ஆதரவை வெளியில் இருந்து தி.மு.க. அளிக்கும் என்றும் எதிர்க்கட்சியாக செயல்பட அக்கட்சி முடிவு செய்துள்ளது என்றும் தகவல் வெளியானது. இதனால், தமிழக அரசியலில் பரபரப்பு நீடித்தது. எனினும், தி.மு.க. இதனை மறுத்தது. 

ஆனால், அ.தி.மு.க. கருத்து தெரிவிக்காமலே இருந்து வருகிறது. த.வெ.க.வுக்கு ஆதரவு கிடையாது என்று அ.தி.மு.க. தெரிவித்து விட்டது. 

இதனை அடுத்து, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை புதுச்சேரியில் சொகுசு விடுதியில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என தகவல் வெளியானது. 

விஜய் ஆட்சியமைக்க இடையூறு செய்யமாட்டோம் என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார். 

எனினும், மு.க.ஸ்டாலினை வி.சி.க. தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்டு கட்சிகளின் தலைவர்கள் சண்முகம் மற்றும் வீரபாண்டியன் ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர். 

ஆட்சி அமைக்க வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை விஜய் கோரியுள்ள நிலையில் ஸ்டாலினை சந்தித்தனர். 

அப்போது, தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டாம் என்றும் தற்போது அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம் எனவும் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் அறிவுறுத்தினார் என கூறப்படுகிறது. 

இதேபோன்று, தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு தலைவர் ஸ்டாலின் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவில், கட்சியின் நலன் கருதி சில முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. 

அதனால், தி.மு.க. எம்.எல்.ஏக்கள் 10-ஆம் திகதி வரை சென்னையிலேயே தங்கியிருக்க வேண்டும். தி.மு.க.வின் திட்டங்கள் தொய்வின்றி தொடர்ந்தால்தான் தமிழகத்தின் வளர்ச்சியை தக்க வைக்க முடியும் என்று கூறியுள்ளார். 

மற்றொரு தேர்தலை நடத்த வேண்டாம் என்பதே நம் நிலைப்பாடு. மதவாத சக்திகளுக்கு இடம் கொடுக்காமல், நிலையான அரசு ஏற்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

அவசரகால முடிவுகளை கட்சி தலைமை எடுக்கும்போது அதனை அங்கீகரிக்க வேண்டும் என்றார். இதனால், எந்த வகையான முடிவை வருங்காலத்தில் அக்கட்சி எடுக்கும் என்று கட்சியினர் எதிர்பார்ப்புடன் உள்ளனர். 

இந்த சூழலில், தி.மு.க.வில் உதயநிதி தலைமையிலான அணியின் இளம் தலைவர்களில் சிலர், விஜய் ஒருமுறை ஆட்சியை பிடித்து விட்டால், எம்.ஜி.ஆரை போன்று அவரை அகற்றுவது சாத்தியமற்ற ஒன்றாகி விடும் என அச்சப்படுகின்றனர். 

எம்.ஜி.ஆர். ஆட்சியமைத்த பின்னர், தி.மு.க.வை அதிகாரத்திற்கு வர விடவில்லை என்பதே அதற்கு காரணம். கட்சியில் உள்ள மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் இதனை நம்ப முடியாமல் உள்ளனர். 

இரு திராவிட கட்சிளுக்கு எதிராக பொதுமக்கள் எதிர்வினையாற்றி ஒரே நிலைக்கு கொண்டு சென்று, பரிசோதனை முயற்சியில் ஈடுபட்டு விட்ட வருத்தத்தில் உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது. 

இந்த நிலையில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க முடிவு மேற்கொண்டால், தனிப்பெரும் கட்சியாக உள்ள த.வெ.க. அதிரடி முடிவை எடுக்கும் என தெரிகிறது. 

அதற்கேற்ப கட்சியின் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் ராஜினாமா செய்வார்கள் என கூறப்படுகிறது. தனிப்பெரும் ஒற்றை கட்சியாக த.வெ.க. உள்ளது. 108 இடங்களை பிடித்துள்ளது. த.வெ.க.வை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என கூறுகிறது. 

அப்படியில்லாமல் தி.மு.க.வோ அல்லது அ.தி.மு.க.வோ கூட்டணி அமைத்து, தமிழகத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினால் 108 எம்.எல்.ஏ.க்களும் இராஜினாமா செய்வார்கள் என த.வெ.க. எச்சரித்து உள்ளது. 

இவ்வாறு த.வெ.கவின் 108 உறுப்பினர்களும் இராஜினாமா ராஜினாமா செய்தால் என்ன நடக்கும் என்பதை பார்ப்போம். 

108 தவெக எம்எல்ஏக்களும் இராஜினாமா செய்தால் இது பெரிய விஷயமாக இருக்கும். ஏனென்றால் இவ்வளவு எம்எல்ஏக்கள் இந்திய வரலாற்றில் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்தது இல்லை. 

இதற்கு முன்பு கடந்த 2018 ல் கர்நாடகாவில் பாஜகவிற்கு ஆதரவு வழங்குவதற்காக காங்கிரஸ்- ஜேடிஎஸ் கூட்டணியில் இருந்த 13 காங்கிரஸ் எம்எல்ஏக்களும், 3 ஜேடிஎஸ் எம்எல்ஏக்களும் இராஜினாமா செய்தனர். 

அதன்பிறகு கடந்த 2023ம் ஆண்டில் ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையேயான அதிகார மோதலில் 81 எம்எல்ஏக்கள் இராஜினாமா செய்து பின்னர் அவர்கள் இராஜினாமாவை திரும்ப பெற்றனர். 

இதனால் 108 தவெக எம்எல்ஏக்கள் ஒரே நேரத்தில் இராஜினாமா செய்தால் அது வரலாற்றில் இடம்பிடிக்கும். 

பொதுவாக எம்எல்ஏக்கள் இராஜினாமா செய்யும்போது சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகியோரிடம் தான் கடிதம் வழங்க வேண்டும். 

ஆனால் தற்போது சட்டசபை கலைக்கப்பட்டுள்ளது. புதிய சட்டசபை இன்னும் அமைக்கப்படவில்லை. இதனால் தவெகவினர் இராஜினாமா செய்தால் ஆளுநரிடம் தான் ராஜினாமா கடிதத்தை வழங்க வேண்டும். 

தேர்தலில் வென்ற இவர்கள் எம்எல்ஏவாக பதவியேற்காமலே இராஜினாமா செய்த நபர்கள் என்ற பெருமையை பெறுவார்கள். 

தமிழகத்தில் மொத்தம் 234 சட்டபை தொகுதிகள் உள்ளன. இதனால் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 234 ஆக உள்ளது. அதில் 108 பேர் இராஜினாமா செய்யும்போது எம்எல்கே்களின் எண்ணிக்கை 126 ஆக குறையும். 

இது அரசியலமைப்புக்கான நெருக்கடி நிலை என்பார்கள். மேலும் 234 எம்எல்ஏக்கள் இருக்கும்போது மெஜாரிட்டி 118 ஆக இருக்கும். ஆனால் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 126 குறையும்போது மெஜாரிட்டி நம்பர் 64 எம்எல்ஏக்களாக குறையும். 

இது திமுக அல்லது அதிமுகவிற்கு சாதகமாகவும் அல்லது இருவரும் கூட்டணி அமைத்தால் அதில் குழப்பத்தையும் ஏற்படுத்தலாம். 

மெஜாரிட்டி 64 எனும்போது திமுக தனது 59 எம்எல்ஏக்கள் + 2 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் + 2 இந்திய கம்யூனிஸ்ட் + 2 விசிக + 2 ஐயூஎம்எல் + ஒரு தேமுதிக ஆதரவில் ஆட்சியை கைப்பற்ற நினைக்கலாம். 

இது அதிமுகவால் தேர்தலில் களமிறங்கிய கூட்டணிக்கு மெஜாரிட்டி இருக்காது. இதனால் தேர்தலுக்கு பிந்தைய திமுக + அதிமுக கூட்டணியில் பிளவு ஏற்படலாம். 

108 எம்எல்ஏக்களும் இராஜினாமாவும் ஏற்கும்பட்சத்தில் அந்த தொகுதிகளில் அடுத்த 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். 

இது நிதிச்சுமையை ஏற்படுத்தும். மேலும் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பேசும் பொருளாகும். அதிமுக - திமுக மற்றும் ஆளுநருக்கு எதிராக தவெகவினர் குற்றச்சாட்டுகளை எளிதில் வைக்க முடியும். 

அதுமட்டுமின்றி தவெகவினருககு பதவி ஆசை ஒன்றும் தங்களுக்கு இல்லை என்பதை மக்களுக்கு எடுத்துரைக்க வாய்ப்பாக அமையும். 

ஒருவேளை அதிமுக - திமுக கூட்டணி ஆட்சியை பிடிக்க முயலும்போது தவெகவின் 108 பேரும் இராஜினாமா செய்தால் அது இருகட்சிகளுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. இதனால் அவர்கள் ஆட்சி அமைக்கும் முயற்சியை கைவிடலாம். 

இதன்மூலம் ஆட்சியை பிடிக்க யாரும் இல்லாத நிலை வரும். அப்போது ஆளுநர், ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை செய்யலாம். 

அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவின் கீழ் ஆளுநர் பரிந்துரையில் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமுலுக்கு கொண்டு வர வாய்ப்புள்ளது. 

ஜனாதிபதி ஆட்சி வந்தால் சட்டசபை தற்காலிகமாக முடக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.