நாட்டில் நாளை முதல் மழை அதிகரிக்கும்...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் நாளை முதல் மழை அதிகரிக்கும்...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கிழக்கு அலைவடிவ காற்று ஓட்டத்தின் தாக்கம் காரணமாக நாளை (டிசம்பர் 16) முதல் நாட்டில் மழை நிலைமையில் சிறிதளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (15.12.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

நாட்டில் நாளை முதல் மழை அதிகரிக்கும்...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Met Department Issues 36 Hour Weather Advisory

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.