டிசம்பர் 16ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பம் : எடுக்கப்பட்டது தீர்மானம்
நாடளாவிய ரீதியில் விடுமுறை வழங்கப்பட்டுள்ள பாடசாலைகள் எதிர்வரும் 16ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சில் இன்று (2025.12.06) நடைபெற்ற கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய பாடசாலை அதிபர்கள், கல்வி நிர்வாக அதிகாரிகள் (தேசிய மற்றும் மாகாண) அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தின் போது பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
அதன்படி, “அனைத்து தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளும் டிசம்பர் 16 அன்று திறக்கப்பட வேண்டும். அன்று திறக்க முடியாத பாடசாலைகளுக்கான தொடக்க நாளை நிர்ணயிக்கும் அதிகாரம் பாடசாலை அதிபர்களுக்கும் மாகாண, வலய கல்வி பணிப்பாளர்களுக்கும் வழங்கப்படுகிறது.
டிசம்பர் 16 அன்று ஆரம்பிக்கும் பாடசாலைகளுக்கு வருட இறுதி விடுமுறை டிசம்பர் 23 முதல் வழங்கப்படும். டிசம்பர் 16 முதல் 22 வரையான காலப்பகுதியில் பாடசாலை சுத்தம், பராமரிப்பு, மீளமைப்பு பணிகள், வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மாணவர்களை அடையாளம் காணல், அவர்களுக்கு தேவையான மனநல மற்றும் பிற நலத்திட்ட உதவிகளை ஏற்பாடு செய்தல் அல்லது சம்பந்தப்பட்ட இடங்களுக்கு பரிந்துரை செய்தல் இவற்றை மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து பாடசாலைகளுக்கும் 2026 கல்வியாண்டு ஜனவரி 01 அன்று தொடங்கப்படும். கல்வியாண்டு தொடங்கியவுடன், 2025 சாதாரண தர பரீட்சைக்கு (O/L) தோற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தவணைப் பரீட்சை நடத்தப்படும்.

பிற வகுப்புகளுக்கான தவணைப் பரீட்சைகளை நடத்த வேண்டுமா என்பதற்கான முடிவு அதிபர் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு ஒப்படைக்கப்படுகிறது. பரீட்சை நடத்தப்பட்டாலோ இல்லையோ, அனைத்து மாணவர்களும் அடுத்த வகுப்பிற்குத் தகுதி பெற்றவர்களாகக் கருதப்படுவார்கள்.
பரீட்சைத் திணைக்களத்துடன் ஆலோசித்து 2025 ஆம் ஆண்டுக்கான உயர்தர (A/L) மீதமுள்ள பாடங்களை மிக விரைவில் நடத்தும் திகதியை நிர்ணயித்தல்.
2025 ஆம் ஆண்டுக்கான உயர்தர மீதமுள்ள பாட பரீட்சைகளுக்கான கால அட்டவணையை அடிப்படையாகக் கொண்டு, 2026 கல்வியாண்டு ஆரம்பிக்கும் நாள் மற்றும் வருடாந்த கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்.” ஆகிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.