கொழும்பு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

கொழும்பு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

கொழும்பு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அனுர ஜயசேகர தெரிவித்துள்ளார். குறித்த மாவட்டங்களில் டெங்கு நோய் பரவும் ஆபத்து அதிகமாக காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். கொழும்பு, இரத்தினபுரி மற்றும் கண்டி மாவட்டங்களிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இந்த மாதத்தில் மாத்திரம் இதுவரையில் 86 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த மாதம் கண்டி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அங்கு 206 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து 202 பேரும், கொழும்பு மாவட்டத்தில் இருந்து 181 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக டெங்கு நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. எனவே, டெங்கு நுளம்பு பரவும் அபாயம் காணப்படும் பகுதிகளில் வாழும் மக்கள், தமது சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.