
காவல்துறை அதிகாரிகள் இருவர் பணி இடைநீக்கம்
காவல்துறை காவலில் இருந்த சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி (Ratnapura) காவல்துறை தலைமையகத்தின் இரண்டு காவல்துறை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி ஒரு சார்ஜென்ட் மற்றும் ஒரு கான்ஸ்டபிளை இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் எஃப்.யூ. வுட்லர், தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், “பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு சந்தேக நபர் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக இரத்தினபுரி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
காவல் நிலையத்தில் இருந்த சந்தேக நபர், நேற்று (30.07.2025) கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டும் என கூறியதாகவும், பின்னர் அறையின் கதவு திறக்கப்பட்ட போது காவல் அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்தேக நபர் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், சமீபத்தில் பாணந்துறை பகுதியில் நடந்த பல துப்பாக்கிச் சூடு சம்பவங்களிலும் அவர் தொடர்புடையவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பாக இரத்தினபுரி காவல் தலைமையகப் பொறுப்பதிகாரியும், அப்போது காவல் நிலையப் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தலைமறைவான சந்தேக நபரைக் கைது செய்ய சிறப்பு காவல் குழு ஒன்று நிறுத்தப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல் துறை கண்காணிப்பாளர் எஃப்.யூ. வுட்லர் மேலும் தெரிவித்தார்.