
யாழில் தேங்காய் உற்பத்தி வீழ்ச்சி - அரசு எடுத்த நடவடிக்கை
யாழில் (Jaffna) இருவார கால தீவிர தேசிய கள செயற்பாடு – 2025 என்னும் தொனிப்பொருளில் வெள்ளை ஈ யைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்திட்டம் ஆரம்பமாகியுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பங்கேற்புடன் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் கச்சாயில் நேற்று திங்கட்கிழமை (14.07.2025) இடம்பெற்றுள்ளது.
தென்னை பயிர்ச் செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜெயக்கொடி தனது ஆரம்ப உரையில், இலங்கையிலேயே இந்தச் செயற்றிட்டம் யாழ். மாவட்டத்தில் தான் ஆரம்பிக்கப்படுகின்றது.
உண்மையில் 3 ஆயிரம் மில்லியன் தேங்காய் உற்பத்தியை வருடாந்தம் நாம் எதிர்பார்த்தாலும் அதனை விடக் குறைவாகவே கிடைக்கப்பெறுகின்றது.
வெள்ளை ஈ தாக்கம் உள்ளிட்ட பல்வேறு நோய்த் தாக்கங்கள், விலங்குகளால் ஏற்படுத்தப்படும் சேதம் என பல காரணிகள் இதில் தாக்கத்தைச் செலுத்துகின்றன.
2030ஆம் ஆண்டு 4,200 மில்லியன் தேங்காய்களை வருடாந்தம் உற்பத்தி செய்யவேண்டும் என்ற இலக்குடன் செயற்படவுள்ளோம். வெள்ளை ஈ தாக்கத்தால் யாழ். மாவட்டத்தில் மாத்திரம் ஒன்றரை லட்சம் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நாம் எடுத்துள்ள இந்த முயற்சிக்கு மக்களின் ஒத்துழைப்பு அதிகமாகவே தேவை.
150 இயந்திரங்கள், 150 பணியாளர்களை நாங்கள் இங்கு அழைத்து வந்துள்ளோம். இருப்பினும் ஓர் இயந்திரத்தை இயக்குவதற்கு ஆகக் குறைந்தது 4 பேர் தேவை.
எனவே எமது ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் மக்கள் உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.