
பேருந்து கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்
பேருந்து கட்டணத்தில் எந்த திருத்தமும் செய்யப்படாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பேருந்து கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமெனில், டீசல் விலையை 25 ரூபா முதல் 30 ரூபா வரையில் குறைக்க வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி நேற்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை திருத்தப்பட்டுள்ளது.
அதன்படி, 299 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 293 ரூபாவாகும்.
361 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 341 ரூபாவாகும்.
இதேவேளை 286 ரூபாவாக இருந்த ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 274 ரூபாவாகும்.
அத்துடன், 331 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 325 ரூபாவாகும்.
இந்நிலையில், எரிபொருள் விலை மட்டும் பேருந்து கட்டணங்களைப் பாதிக்கும் ஒரே காரணியல்ல எனவும், ஏனைய அனைத்து செலவுகளும் அதிகரித்துள்ளதாக கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்,
அந்தவகையில், டீசல் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டிருந்தாலும், பேருந்து கட்டணத்தில் எந்த திருத்தமும் செய்யப்படாது என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.