
விசேட கொடுப்பனவு பெற உள்ள ஒரு தரப்பு அரச ஊழியர்கள்
“சிறி தலதா வழிபாடு” விசேட தலதா கண்காட்சிக்காக கடமையில் ஈடுபட்டுள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு விசேட பயண செலவுகள் மற்றும் ஒருங்கிணைந்த கொடுப்பனவு ஒன்றை வழங்குவதற்கு காவல்துறை (Sri Lanka Police) தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கண்டி (Kandy) சிறி தலதா மாளிகை வளாகத்தில் விசேட தலதா கண்காட்சி இன்று (18.04.2025) முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
ஆகையால் அங்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்களின் பாதுகாப்பிற்காக, காவல்துறையினர் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.
அதன்படி, இதில் பங்கேற்கும் அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் விசேட பயண செலவுகள் மற்றும் ஒருங்கிணைந்த கொடுப்பனவு ஒன்றை வழங்குவதற்கு, பதில் காவல்துறைமா அதிபர் காவல்துறையினருக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
இதன்படி, விசேட கடமைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தமது பணியிடங்களுக்கு வெளியே 10 நாட்களுக்கு மேல் பகல் மற்றும் இரவு கடமைகளை ஆற்ற வேண்டியிருப்பதால், அவர்களுக்கு ஏற்படும் மேலதிக செலவுகளை கருத்தில் கொண்டு இந்த விசேட கொடுப்பனவை வழங்க காவல்துறை தலைமையகம் தீர்மானித்துள்ளது.