ஸ்ரீலங்காவில் நவகோடி சித்தர்கள் தவமிருக்கும் அதிசய முருகன் ஆலயம் - யாரும் அறியா இரகசியம்
மொனராகல மாவட்டத்திலுள்ள யால சரணாலயத்தின் மத்தியில் கபில்வத்தை அல்லது கபிலித்தை எனும் இடம் உள்ளது. அங்கு மிகவும் பழமையான சக்திவாய்ந்த அதிசயமான ஒரு முருகன் ஆலயம் உள்ளது.
கட்டடங்கள் இல்லாத, பூசகர் இல்லாத சக்தி வாய்ந்த கோயில் இது. 12 சிற்றாறுகளைக் கடந்து, 32 கி.மீ ட்ராக்டர் வண்டியில் மிக கடினமாக பயணம் செய்தே இந்த வனத்தை அடைய முடியும்.
கபிலித்தை என்று அழைக்கப்படும் இந்த இடம் முருகப்பெருமான் வாழும் இடம் என்கிறார்கள் இப்பிரதேச மக்கள். மிகப் பண்டைய காலத்தில் முருகனுக்காக உருவான திறந்தவெளி மரக்கோயில் இது என்று மக்கள் கூறுகிறார்கள். இங்குதான் முருகப்பெருமான், ஆதியில் தவமியற்றி சக்திகளை பெற்றதாக ஐதீகம் சொல்கிறது.
பின்னர் முருகன் கதிர்காமத்தில் சூரசம்ஹாரத்தை முடித்த பின்னர் தனது தங்க வேலை எறிந்ததாகவும் , அந்த வேல் ஓர் புளியமரத்தில் வீழ்ந்ததாகவும், அப்புளியமரத்தின் கீழ் வேடுவர்கள் முருகனின் வேலை வைத்து வழிபட்டு வந்ததாகவும் ஐதீகம் நிலவுகிறது.
ஆதியில் கதிர்காமத்தில் போகர் பெருமான் வைத்து பூஜை செய்து காணாமல் போன நவாக்சரி யந்திரம் நவபாஷாண வேல் இங்குதான் இருப்பதாக இந்துக்களால் நம்பப்படுகிறது. இந்த இடத்தை இன்றும் ஆதிகதிர்காமம் என்றே பழைய சிங்கள நூல்கள் குறிப்பிடுகின்றன. இன்றும் இங்கு நவகோடி சித்தர்கள் தவமிருப்பதாக பலரும் பேசிக் கொள்கின்றனர்.
மேலும் இலங்கையில் அக்காலத்தில் மன்னர்கள் இங்கு சென்று வழிபட்ட பின்னர்தான் தங்கள் அரச பதவிகளை ஏற்பது வழக்கமென்றும் பரம்பரை பரம்பரையாக கதைகள் உலவி வருகின்றன. முறையாக விரதமிருந்து, அங்கு சென்று வந்தால் அடுத்த வருடத்துக்குள் நினைத்து சென்ற காரியம் நடைபெறுமென்பது ஐதீகம்.