கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தலைமையிலான குழுவினால் தயாரிக்கப்பட்ட புதிய கல்வி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதை ஒரு வருடத்திற்கு ஒத்தி வைக்க புதிய கல்வி அமைச்சு (Ministry of Education) நடவடிக்கை எடுத்துள்ளது.

சீர்திருத்த முன்மொழிவுகளை மறுபரிசீலனை செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சீர்திருத்தங்களின் கீழ், பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக ஒரு தொகுதி (அலகு) முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இது தொடர்பான முன்னோடித் திட்டம் தேசிய கல்வி நிறுவனத்தால் (National Institute of Education) சுமார் இருநூறு பாடசாலைகளில் ஒன்று, ஆறு மற்றும் பத்தாம் ஆண்டு மாணவர்களைப் பயன்படுத்தி செயல்படுத்தப்பட்டது. 

முன்னோடித் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையையும் நிறுவனம் தயாரித்துள்ளது.

அந்த அறிக்கையின்படி, அடுத்த ஆண்டு முதல் அனைத்துப் பாடசாலைகளிலும் அந்தத் தர மாணவர்களுக்கான மாட்யூல் முறையை நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டது.

இந்தச் சீர்திருத்தங்களின்படி, பாடசாலைக் கல்வியை பன்னிரண்டாம் வகுப்போடு முடித்துவிட்டு, பொதுத் தேர்வை பத்தாம் வகுப்பில் நடத்துவதற்கு முன்மொழியப்பட்டது.

இந்நிலையிலேயே புதிய கல்வி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதை ஒரு வருடத்திற்கு ஒத்தி வைக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.