எட்டு இலட்சம் பெறுமதியான 02 வலம்புரிச் சங்குகளுடன் சந்தேக நபர் கைது!

எட்டு இலட்சம் பெறுமதியான 02 வலம்புரிச் சங்குகளுடன் சந்தேக நபர் கைது!

இரண்டு வலம்புரிச் சங்குகளுடன் ஒருவர் சந்தேகத்தின் பேரில் புத்தளம் (puttalam) பிராந்திய காவல்துறையின் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வலம்புரிச் சங்குகளை விடுதி உரிமையாளர் ஒருவருக்கு விற்பனை செய்ய உள்ளதாக புத்தளம் மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் நாலக சில்வாவுக்கு இரகசியத் தகவல் கிடைக்கெப்பெற்றது.

அதற்கமைய புத்தளம் பாலாவிப் (palavi) பகுதியில் வைத்து புத்தளம் பிராந்திய காவல் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கரவனெல்ல (Karavanella) பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய திருமணமானவரென்றும் குறித்த நபர் ஓடு தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிவதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட இரண்டு வலம்புரிகளும் தலா 88 கிராம் மற்றும் 99 கிராம் எடையுள்ளதாகவும், இவை சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியுடையவை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட வலம்புரிச் சங்குகளையும் மேலதிக விசாரணைக்காக புத்தளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக புத்தளம் பிராந்திய காவல் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.