ஒரே வீட்டில் மீட்க்கப்பட்ட இரு சடலங்கள்: தீவிர விசாரணைகளை ஆரம்பிக்கும் பொலிஸார்!!
உடப்புஸ்ஸல்லாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடுல்ல - பாஹலகம பகுதியில் வீடு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரினதும், பெண் ஒருவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சடலங்கலானது இன்று(06.04.2024) காலை மீட்கப்பட்டுள்ளதாக உடப்புஸ்ஸல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது மூன்று பிள்ளைகளின் தாயான டபிள்யூ.எம்.பிரியங்கனி (வயது 42) மற்றும் பி.எம்.அனுர பண்டார (வயது 39) ஆகிய இருவரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ள மூன்று பிள்ளைகளின் தாயான பிரியங்கனிக்கும், இவருடன் உயிரிழந்த திருமணமாகாத ஆண் அனுர பண்டார ஆகிய இருவருக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதேநேரத்தில் இருவருக்கும் இடையில் இருந்து வந்த தகாத உறவு பெண்ணின் கணவருக்குத் தெரியவந்ததையடுத்து நேற்றுமுன்தினம் மாலை தாக்குதல் சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து மேற்படி பெண் தனது வீட்டை விட்டு தகாத உறவைப் பேணி வந்த நபருடன் சென்றுள்ள நிலையில் இருவரும் வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு வலப்பனை நீதிவான் வருகை தந்து சடலங்களைப் பார்வையிட்டு மரண விசாரணை நடத்தியுள்ளதோடு, சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டார்களா? அல்லது கொலை செய்யப்பட்டார்களா? போன்ற கோணங்களில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.