மற்றுமொரு பேச்சுவார்த்தை தற்போது ஜனாதிபதியின் தலைமையில்..
கடந்த 3 மாதங்களாக முடங்கி இருந்த பொது போக்குவரத்து சேவைகள் இன்று முதல் வழமைக்கு திரும்பியுள்ளன. இதனை அடுத்து பெருந்திரளான மக்கள் இன்றையதினம் பேருந்து மற்றும் தொடருந்து நிலையங்களில் கூடி இருந்தமையை அவதானிக்க முடிந்தது. 49 அலுவலக தொடர்ந்து சேவைகளுடன், மொத்தமாக 270 சேவைகள் இன்று நடத்தப்பட்டதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
3 மாதங்களுக்கு பின்னர் மட்டக்களப்பு, - கொழும்பு தொடருந்து சேவை இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. இதன்படி இன்று காலை 6.10க்கு மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி முதலாவது தொடருந்து தமது பயணத்தை ஆரம்பித்தது. அதேநேரம் பொல்கஹாவெல தொடருந்து நிலையத்தில் இயல்பைவிட அதிக சனநெரிசல் மிக்கதாக காணப்பட்டது என எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், தொடர்ந்து போக்குவரத்து சேவைக்கு நிகராக அரச மற்றும் தனியார் பேருந்து சேவைகளும் அதிகளவில் இன்று நடத்தப்பட்டன. ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைவாக பேருந்து சேவைகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தனியார் பேருந்து தொழிற்சங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, அனைத்து பொது போக்குவரத்து சேவைகளையும் வழமைக்கு கொண்டுவருவது தொடர்பான மற்றுமொரு பேச்சுவார்த்தை தற்போது ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்று வருவதாக அறியமுடிகிறது.