
அதிகரித்த வெப்பநிலை : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டின் சில மாவட்டங்களில் நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கமைய, இன்றைய தினம் (22) வடமேல் மாகாணத்திலும் கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மனித உடலினால் உணரக்கூடிய அதிகூடிய வெப்பநிலை, எச்சரிக்கை மட்டத்தில் காணப்படும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எனவே அதிக வெப்பத்திலிருந்து பொதுமக்கள் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுறுத்தல்களையும் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதனால் போதுமான அளவு நீரை அருந்துமாறும், பணியிடங்களில் முடிந்தளவு நிழலில் இருக்குமாறும், அதிக சோர்வை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடாதிருத்தல், வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை வீட்டில் உள்ள வயோதிபர்கள் மற்றும் நோய் நிலைமையுள்ளவர்கள் குறித்தும் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.