கருங்கல்லை ஏற்றுமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி!
வரையறைக்கு உட்பட்டு நாட்டிலிருந்து கருங்கல்லை ஏற்றுமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
நிர்மாணம் மற்றும் அபிவிருத்தி பணிகளுக்கு கருங்கல்லின் பயன்பாடு ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதால், கருங்கல் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் மற்றும் அது சார்ந்த சமூகங்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலைமையை கருத்திற்கொண்டு, வரையறைக்கு உட்பட்டு கருங்கல்லை ஏற்றுமதி செய்வதன் மூலம் இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது பொருத்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப் பணியின் போது அகற்றப்பட்ட கருங்கற்கள் தற்போது துறைமுக நிர்வாக கட்டடத்துக்கு அருகிலும், ஹம்பாந்தோட்டை புதிய வைத்தியசாலை வளாகத்திலும் குவிக்கப்பட்டுள்ளன.
குறித்த கருங்கற்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சுற்றாடல் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கமைய, புவிசரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் கண்காணிப்பின் கீழ் குறித்த கருங்கற்களை துரிதமாக ஏற்றுமதி செய்வதற்கு அனுமதியை வழங்கவும், ஒரு மில்லியன் மெட்ரிக் டன் கருங்கற்களை ஏற்றுமதி செய்வதற்கான இயலுமை உள்ளிட்ட விடயங்களை ஆராய்வதற்கு குழுவொன்றை நியமிக்கவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.