மட்டக்களப்பில் இடம் பெற்ற பரபரப்பு சம்பவம்
மட்டக்களப்பில் போதைப்பொருள் பாவனையாளர் ஒருவர் தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கட்டிப்பிடித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த நபர் கடந்த வெள்ளிக்கிழமை (27) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15ஆம் திகதி வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலை பகுதியில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றது.
போதைப்பொருள் பாவனையாளர் ஒருவர் தனது குழந்தையை தாக்கிவிட்டு தனது உடம்பில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டபோது அதனை தடுக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் தீக்காயங்களுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து தீக்காயங்களுக்குள்ளான அந் நபரும் பொலிஸ் உத்தியோகத்தரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்துள்ளனர்.
இந் நிலையிலேயே தீ வைத்துக்கொண்ட அந் நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
உயிரிழந்தவர் 37 வயதானவர் என்றும் ஒரு பிள்ளையின் தந்தை எனவும் தெரிய வந்துள்ளது.
காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்ந்தும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.