தேர்தலில் களமிறங்கும் மைத்திரி - சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்!

தேர்தலில் களமிறங்கும் மைத்திரி - சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்!

அதிபர் தேர்தலில், சிறிலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளராக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவே களமிறக்கப்படுவார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக் கூட்டம் இடம்பெற்ற போது அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“சுதந்திர கட்சி சார்பில் தான் அதிபர் வேட்பாளராக போட்டியிடுவேன் என்று முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே அறிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவரை அதிபர் வேட்பாளராக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ள போதிலும், அவருக்கு ஆதரவளிக்குமாறு இதுவரையில் எம்மிடம் எந்தவொரு கோரிக்கையோ அல்லது பேச்சுவார்த்தைக்கான அழைப்போ விடுக்கப்படவில்லை.”என தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் அதிபர் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியில் சஜித் பிரேமதாசவே அதிபர் வேட்பாளராகக் களமிறக்கப்படுவார் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளராக எதிர்க்கட்சி தலைவர் களமிறக்கப்பட்டாலும், தற்போது நாடாளுமன்றத்தில் எதிரணியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளிடம் அவருக்கான ஆதரவைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தாம் வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளதாக முன்னாள் இராணுவ தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.