வைத்தியசாலை, துறைமுகம், வங்கி உள்ளிட்ட பல துறையினர் பணிப்புறக்கணிப்பில்

வைத்தியசாலை, துறைமுகம், வங்கி உள்ளிட்ட பல துறையினர் பணிப்புறக்கணிப்பில்

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிராக இன்று (13) நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கை, வட்டி விகித அதிகரிப்பு, மின் கட்டண அதிகரிப்பு, அரசாங்க ஊழியர்களின் பிரச்சினைகள் போன்ற பல பிரச்சினைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தொழில்சார் நடவடிக்கைகளை இந்த வாரத்தில் மேலும் தீவிரப்படுத்துவதற்கு தொழிற்சங்க கூட்டு கடந்த தினம் தீர்மானித்திருந்தது.

கடந்த வாரத்தில் பல துறைகளில் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அதில் இணைந்து கொள்ளவில்லை.

எவ்வாறாயினும், இன்று முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் இந்தப் போராட்டங்கள் மற்றும் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளது.

இதன்படி, மேல், தென், மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுடன் இணைந்து இன்று காலை 08 ஆம் திகதி முதல் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சம்மில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை தாதியர் சங்கம், நீர்வழங்கல் சங்கங்களின் கூட்டு அமைப்பு, அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம், இலங்கை வங்கி ஊழியர் சங்கம், அரச மற்றும் அரை அரச தொழிற்சங்கங்களின் ஒன்றியம், ஆசிரியர் சங்கம் மற்றும் பிரதான தொழிற்சங்கங்கள் உட்பட பல தரப்பினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த அனைத்து வங்கி ஊழியர்களும் இன்று கறுப்பு ஆடை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதுடன், துறைமுக ஊழியர்களும் இன்று முதல் 48 மணிநேரம் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளனர்.

தமது பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உரிய முறையில் பதிலளிக்காவிடின் எதிர்வரும் 15ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தேசிய தொழிற்சங்க மையத்தின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.