வாக்களிப்பதற்கு விடுமுறை வழங்க மறுக்கும் நிறுவனங்கள் தொடர்பாக முறையிடுங்கள் – கஃபே

வாக்களிப்பதற்கு விடுமுறை வழங்க மறுக்கும் நிறுவனங்கள் தொடர்பாக முறையிடுங்கள் – கஃபே

வாக்களிப்பதற்கு தனியார் நிறுவனங்களிடமிருந்து விடுமுறை பெறுவதில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் தம்மிடம் முறைப்பாடு செய்யுமாறு மக்களிடம் கஃபே அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

கஃபே அமைப்பின் முறைப்பாட்டு பிரிவு, குறித்த முறைப்பாடுகளை ஏற்குமென அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளார்.

அத்தோடு, குறித்த முறைப்பாடுகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்தாலோசித்து தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென்றும் அவர் கூறினார்.

ஒவ்வொரு தேர்தலிலும் பல தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் வாக்குரிமையை மீறுகின்றன என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், இது ஒரு பாரதூரமான நிலையென குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பிரகாரம், தாம் வாழும் பிரதேசத்திற்கு ஏற்ப விடுமுறையை பெற்றுக்கொள்வது ஊழியர்களின் உரிமையென குறிப்பிட்டுள்ள அஹமட் மனாஸ், அதற்கேற்ப நிறுவனங்களின் தலைவர்கள் தமது ஊழியர்களுக்கு கட்டாயம் விடுமுறை வழங்க வேண்டுமென  சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தவகையில், விடுமுறை வழங்க மறுக்கும் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கஃபே அமைப்பு செயற்படுவதாகவும், ஆகவே அவ்வாறான முறைப்பாடுகளை 0114341524 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அல்லது 0112866224 என்ற தொலைநகல் (FAX) இலக்கத்தின் ஊடாக அல்லது info@caffesrilanka.org மின்னஞ்சல் ஊடாக கஃபே அமைப்பின் முறைப்பாட்டு பிரிவுக்கு அறிவிக்குமாறு அஹமட் மனாஸ் மக்கீன் கோரியுள்ளார்.