நடிகர் வில் ஸ்மித் ஆஸ்கார் விழாவில் பங்கேற்ற 10 ஆண்டு தடை!
நடிகர் வில் ஸ்மித் ஆஸ்கார் விருது விழாக்களில் பங்கேற்க 10 ஆண்டுகள் தடை விதித்து அகாடமி அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் வில் ஸ்மித் மனைவியை பற்றி கேலி செய்ததாக, நகைச்சுவை நடிகரை கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
94-வது ஆஸ்கர் விருது விழாவில் பங்கேற்ற நடிகர் வில் ஸ்மித்திற்கு முதன் முறையாகக் 'கிங் ரிச்சர்ட்' திரைப்படத்தில் நடித்ததற்காக விருதை அவர் வென்றார்.
அப்போது தான் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் பற்றி தொகுப்பாளரும், காமெடி நடிகருமான கிறிஸ் ராக், நகைச்சுவையாக பேசினார். அதனால் அதிருப்தி அடைந்த வில் ஸ்மித் மேடைக்கு சென்று கிறிஸ் ராக் கன்னத்தில் அறைந்தார்.
இச்சம்பவத்திற்கு, வில் ஸ்மித் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டார். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்க கிறிஸ் ராக் மறுப்பு தெரிவித்து விட்டார்.
அதே சமயம் ஆஸ்கார் கமிட்டி இது குறித்து விசாரணை நடத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக வில் ஸ்மித் ஆஸ்கர் அகாடமி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில், ஆஸ்கர் விருது விழா மற்றும் பிற அகாடமி நிகழ்வுகளில் கலந்துகொள்ள வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை விதித்து அகாடமி அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, ஆஸ்கார் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆஸ்கர் மேடையில் வில் ஸ்மித் வெளிப்படுத்தியது ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை ஆகும்.
இந்த எதிர்பாராத சம்பவத்துக்காக நாங்கள் வருந்துகிறோம். அந்த அசாதாரண சூழலிலும் அமைதி காத்த கிறிஸ் ராக்கிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், ஸ்மித்துக்கு தடை என்னும் முடிவு கலைஞர்கள் மற்றும் விருந்தினர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கத்தோடும், அகாடமியின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கும் நோக்கத்தோடும் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.