8 அமைச்சுக்களின் செயலாளர்களின் நியமனத்துக்கு அனுமதி...

8 அமைச்சுக்களின் செயலாளர்களின் நியமனத்துக்கு அனுமதி...

8 அமைச்சுக்களின் செயலாளர்களின் நியமனத்துக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் 23.11.2021 நடைபெற்ற பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் மத்தியில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனர் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்னவும் உள்ளடங்குகின்றார்.

அத்துடன், அபிவிருத்தி கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சின் செயலாளராக திரு.டபிள்யூ.எச். கருணாரத்ன அவர்களையும், திறன்கள் அபிவிருத்தி, தொழில்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சின் செயலாளராக திருமதி.டி.என்.லியனகே அவர்களையும், கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு தோட்ட பயிர்ச் செய்கை அபிவிருத்தி, அவை சார்ந்த தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளராக திரு.டி.எல்.பி.ஆர்.அபேரத்ன அவர்களையும் நியமிப்பதற்கு உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

பிரம்புகள், பித்தளை, மட்பாண்டங்கள், தளபாடங்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளராக திரு.எம்.ஏ.பி.வி. பண்டாரநாயக அவர்களையும், தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளராக திருமதி.கே.ஏ.டி.ஆர். நிஷாந்தி ஜயசிங்க அவர்களையும் நியமிப்பதற்கு இங்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சேதன பசளை உற்பத்தி மேம்பாடு மற்றும் விநியோக ஒழுங்குறுத்துகை மற்றும் நெல், தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு, விதை உற்பத்திகள் மற்றும் உயர் தொழில்நுட்ப கமத்தொழில் இராஜாங்க அமைச்சின் செயலாளராக திரு.எம்.என்.ரணசிங்க நியமிப்பதற்கும், கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளராக திரு.பி.ஏ.ஐ. சிறிநிமல் பெரேராவையும் நியமிப்பதற்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.

உயர் பதவிகள் பற்றிய குழுக் கூட்டத்தில் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன, டக்ளஸ் தேவானந்தா, பந்துல குணவர்தன, உதய கம்மன்பில, இராஜாங்க அமைச்சர்களான விதுர விக்கிரமநாயக்க, வைத்திய கலாநிதி சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே, பாராளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, ஜோன் செனவிரத்ன, தலதா அதுகோரல மற்றும் தருமலிங்கம் சித்தார்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.