பசறை பேருந்து விபத்து: பெற்றோரை இழந்த 3 சிறுவர்கள் சார்பில் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல்

பசறை பேருந்து விபத்து: பெற்றோரை இழந்த 3 சிறுவர்கள் சார்பில் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல்

பசறை - லுணுகலை பிரதான வீதியில் கடந்த மார்ச் 20 ஆம் திகதி இடம்பெற்ற பேருந்து விபத்தில் தமது பெற்றோரை இழந்த மூன்று சிறுவர்கள் சார்பில் அவர்களது பாட்டனார் மற்றும் பாட்டியினால் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு எதிராக இந்த அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பசறையில் இடம்பெற்ற குறித்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.

வீதி அபிவிருத்தி அதிகார சபை தமக்கான பொறுப்பினை உரிய வகையில் நிறைவேற்றாமையே இந்த விபத்து ஏற்படுவதற்கு காரணமாகும் என மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்து ஏற்பட்ட பகுதியில் வீழ்ந்து இருந்த பாறையானது நீண்ட காலமாக அகற்றப்படாமையினால், அது அந்தப் பகுதியுடனான வாகன போக்குவரத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தியிருந்ததாகவும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே குறித்த பாறை அகற்றப்படாமைக்கும், விபத்து ஏற்பட்டமைக்கும் தொடர்பு உள்ளதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாத்தா மற்றும் பாட்டியுடன் 9, 8 மற்றும் 4 வயதுடைய மூன்று சிறுவர்களும் உயர் நீதிமன்றில் முன்னிலையாகி குறித்த அடிப்படை உரிமைகள் மனுவை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.