சனிக்கிழமைகளிலும் பாடசாலைகளை நடத்த தீர்மானம்? கல்வியமைச்சின் செயலாளர் விளக்கம்

சனிக்கிழமைகளிலும் பாடசாலைகளை நடத்த தீர்மானம்? கல்வியமைச்சின் செயலாளர் விளக்கம்

தாமதமாகி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் கல்வியாண்டை உரிய வகையில், நிறைவு செய்வதற்கு தேவையான மாற்று வழிகளைப் பயன்படுத்தக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, டிசம்பர் மாதம் கல்வியாண்டு நிறைவடைந்ததன் பின்னர் மாணவர்கள் அடுத்த தரத்திற்கு தரம் உயர்த்தப்படுவதுடன், கைவிடப்பட்ட பாட விதானங்களை ஏதேனும் ஒரு முறையில் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அது தொடர்பில் தேசிய கல்வி நிறுவகத்துடன் கல்வி அமைச்சு கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதுடன், மாற்று வழியாகச் சனிக்கிழமைகளில் பாடசாலைகளை நடத்துதல், வார நாட்களில் மேலதிக நேரத்தை செலவிடுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

அதேநேரம் நேற்றைய தினம் பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளில் கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.

நேற்றைய தினம் 94 சதவீதமான அதிபர்களும் 90 சதவீதமான ஆசிரியர்களும் பாடசாலைகளுக்கு சமுகமளித்திருந்ததாக கல்வி அமைச்சு தெரிவித்திருந்தது.

மாணவர்களின் வருகை 46 சதவீதமாகக் காணப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் சப்ரகமுவ மாகாணத்திலேயே அதிகளவான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை பதிவானதாகக் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.