அதிபர்களுக்கும், ஆசிரியர்களுக்குமான அறிவிப்பு!

அதிபர்களுக்கும், ஆசிரியர்களுக்குமான அறிவிப்பு!

அனைத்து அதிபர்களும், ஆசிரியர்களும் வரும் 21ஆம் திகதி பணிக்குச் சென்று கடமையில் ஈடுபட வேண்டும் எனவும் இது யாருக்கும் எதிரான செயற்பாடு அல்ல எனவும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா. புவனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்று (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், வரும் 21 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளன. ஒரு சில அதிபர், ஆசிரிய தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டத்தில் உள்ளன. இதன் மூலம் மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் முற்றாக தடைப்பட்டுள்ளன. ஆனால் பிரத்தியேகமாக பல ஆசிரியர்கள் பணம் பெற்று கற்பித்தலில் ஈடுபட்டுள்ளனர்.

முதலில் போராட்டம் தொடங்கியது சம்பள உயர்ச்சிக்காக அல்ல. கொத்தலாவல பல்கலைக்கழகத்திற்கு எதிராக தனி ஒரு மனிதனாக ஒரு ஆசிரிய தொழிற் சங்கத்தின் செயலாளர் தொடக்கிய போராட்டம். இவ்விடயம் தொடர்பில் அவரது சங்கத்தினருக்கே அது தெரியாது.

அவரை தனிமைப் படுத்தலுக்கு கொண்டு சென்று விடுவிக்கப்பட்ட பின்னரே சம்பள முரண்பாடு தொடர்பான விடயம் பேசப்பட்டது. இந்த விடயங்கள் தொடர்பாக எவரும் எம்முடன் பேசவும் இல்லை. கலந்துரையாடவும் இல்லை.

நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கும் போது இலங்கையில் உள்ள அனைத்துச் சங்கங்களுடனும் பேச வேண்டும். 2 அரசியல் கட்சி சார்ந்த சங்கங்கள் தமது அரசியல் நலனுக்காக இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தமை இப்போது வெளிப்படுகின்றது.

இதைவிட இந்தப் போராட்டம் முன்னெடுத்த காலம் தவறானது. உலகில் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டு மரணங்கள் தொடராக நடைபெறும் நேரத்தில் இதனை முன்னெடுக்க முடியாது. சம்பள அதிகரிப்பு அல்லது முரண்பாடு தீர்த்தல் தொடர்பாக முன்னைய ஆட்சிக்காலத்தில் ஏன் வாய்திறக்கவில்லை. ஏன் இதுபோன்ற போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. இப்போராட்டம் தொடர்பில் கல்வித்துறை சார்ந்த புத்திஜீவிகள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் அதிருப்தி வெளியிட்டனர்.