ஸ்ரீலங்கா மக்களின் அசட்டையீனம்! மீண்டும் முழுமையாக முடக்கப்படும் அபாயத்தில் நாடு - சுகாதார அமைச்சு எச்சரிக்கை

ஸ்ரீலங்கா மக்களின் அசட்டையீனம்! மீண்டும் முழுமையாக முடக்கப்படும் அபாயத்தில் நாடு - சுகாதார அமைச்சு எச்சரிக்கை

மக்களின் செயல்பாடுகளினால் கடந்த சில மாதங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டுகளை மீண்டும் அமுல்படுத்த நேரிடும். இது மீண்டும் மக்களின் இயல்பு வாழ்க்கையை பின்நோக்கி திருப்பும் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பணிப்பாளர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலை தொடர்பில் விளக்கம் அளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் பேசிய அவர்,

போக்குவரத்து சேவைகளில், வர்த்தக சந்தைகள் மற்றும் தேர்தல் கூட்டங்களிலும் தனிநபர் இடைவெளியை பேணுவது மிகவும் பலவீனமான நிலையில் இருக்கின்றது.

தனிநபர் இடைவெளியை கவனத்தில் கொள்ளப்படாத நிலைமையை காணக் கூடியதாக இருக்கின்றது. இது மிகவும் மோசமான நிலைமை.

இவ்வாறான இடங்களில் கொரோனா நோயாளி ஒருவர் இருந்தார் என்றால், பலருக்கு நோய் பரவும் ஆபத்து இருக்கின்றது. அந்த இடங்களில் இருந்தவர்களை கண்டறிவது மிகவும் கடினமானது.

இதனால், தனிநபர் இடைவெளியை பேணி, சன நடமாட்டம் உள்ள இடங்களுக்கு செல்லும் போது முககவசங்களை அணிவது மற்றும் கைகளை கழுவுவது மிகவும் முக்கியமானது.

இந்த சந்தர்ப்பத்தில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாது போனால், அது பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதுடன் இவ்வாறான நிலைமையில் கடந்த சில மாதங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டுகளை மீண்டும் அமுல்படுத்த நேரிடும். இது மீண்டும் மக்களின் இயல்பு வாழ்க்கையை பின்நோக்கி திருப்பும்.

தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள நிலைமையானது இரண்டாவது அலையாக பரவும் ஆபத்து இருந்தாலும் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அடையாளம் காணப்படாத நோயாளி மற்றுமொரு இடத்தில் இருந்தால், அது இரண்டாவது அலை உருவாக்கும் ஆபத்து காணப்படுகிறது.

இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள மக்கள் சுகாதார பாதுகாப்பு முறையை கடைபிடிக்க வேண்டியது அத்தியவசியமானது எனவும் சுதத் சமரவீர வலியுறுத்தியுள்ளார்.