மத்திய வங்கியின் அறிவிப்பு

மத்திய வங்கியின் அறிவிப்பு

கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் புதிய தோற்றம் மற்றும் அதன் காரணமாக கடன்பாட்டாளர்களுக்கேற்பட்ட இடர்பாடுகளைக் கருத்திற்கொண்டு, கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட கடன்பாட்டாளர்களுக்கு 2021.12.31 வரை ஏற்கனவே (2021.08.31 வரை) வழங்கப்பட்ட சலுகைகளை நீடிப்பதனை பரிசீலனையில் கொள்ளுமாறு உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளையும் உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளையும் (உரிமம்பெற்ற வங்கிகள்) இலங்கை மத்திய வங்கி கேட்டுக் கொண்டுள்ளதாக பொதுமக்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறது.

உரிமம்பெற்ற வங்கிகள் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கும் தனிப்பட்டவர்களுக்கும் வழங்குகின்ற மேலதிகச் சலுகைகள் இலங்கை மத்திய வங்கியால் குறிப்பிடப்பட்ட நன்மைகளிலும் பார்க்க குறையாத விதத்தில் ஒட்டுமொத்த நன்மைகளைக் கொண்டதாக இருத்தல் வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றன.

இச்சலுகைகள் பாதிக்கப்பட்ட கடன்பாட்டாளர்களுக்கு 2022 ஜனவரி முதல் தொடர்ந்து தங்கள் நிலுவைச் தொகைளைத் திருப்பிச் செலுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஒரு வாய்ப்பை வழங்குமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. உரிமம்பெற்ற வங்கிகளின் நாளாந்த வர்த்தகச் செயற்பாடுகளும் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, வைப்பாளர்களுக்கு வட்டி அல்லது முதலை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்துதல் மற்றும் அத்தியாவசிய தொழிற்படு செலவினங்களை மேற்கொள்ளுதல் போன்ற அவர்களின் கடப்பாடுகளை தொடர்ச்சியாகப் பூர்த்திசெய்கின்றன என்பதனை கருத்தில் கொள்வது அவசியமாகும்.

எனவே, கடன் வசதிகளைப் பிற்போடுதல் அல்லது மறுசீரமைப்பைக் கோருவதற்குப் பதிலாக கடனைத் திருப்பிச் செலுத்தக்கூடிய தகுதியுள்ள கடன்பாட்டாளர்களை திருப்பிச் செலுத்துவதைத் தொடங்கவும், தொடரவும் இலங்கை மத்திய வங்கி வலியுறுத்துகின்றது. உரிமம்பெற்ற வங்கிகள் பாதிக்கப்பட்ட கடன்பாட்டாளர்களின் மீளச்செலுத்தும் திறனை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன் மேலும் கடன்பாட்டாளர்கள் தங்கள் நாளாந்த நடவடிக்கைகளுக்குத் தேவையற்ற சுமையில்லாமல் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு வசதியாக புதிய மீளச் செலுத்தும் திட்டங்களில் சுமுகமாக உடன்பட வேண்டும்.

தற்போது சுற்றுலா மற்றும் பயணிகள் போக்குவரத்து போன்ற இலக்கு பொருளாதாரத் துறைகளில் பாதிக்கப்பட்ட கடன்பாட்டாளர்களுக்கு சலுகைகளை வழங்குகின்ற ஏனைய இரண்டு திட்டங்கள் 2021.09.30 வரை நடைமுறையிலுள்ளன.