இலங்கைக்கான முதலாவது நியூஸிலாந்து உயர்ஸ்தானிகர் பிரதமரை சந்தித்தார்!
இலங்கைக்கான முதலாவது நியூஸிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எட்வட் அபல்டனுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்த தமது விருப்பத்தை நியூஸிலாந்து உயர்ஸ்தானிகர் பிரதமரிடம் தெளிவுப்படுத்தியுள்ளார்.
உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி நாடான நியூஸிலாந்து இலங்கையின் பால் உற்பத்தி துறையை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்பம் மற்றும் அறிவை பகிர்ந்து கொள்ள இணக்கம் காணப்பட்டுள்ளது.
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுடன், இதற்கு முன்னர் மேற்கொண்ட கலந்துரையாடல் குறித்து நினைவுகூர்ந்த நியூஸிலாந்து உயர்ஸ்தானிகர் விளையாட்டின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை உறுதிப்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்தநிலையில், நியூசிலாந்து அரசாங்கத்துடன் எதிர்காலத்திலும் ஒத்துழைப்புடன் செயற்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக உள்ளதாக இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.