2021-23 டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளிகள் எவ்வாறு கணக்கிடுவது?: புதிய முறையை வெளியிட்டது ஐசிசி

2021-23 டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளிகள் எவ்வாறு கணக்கிடுவது?: புதிய முறையை வெளியிட்டது ஐசிசி

கடந்த முறை ஒரு தொடருக்கு அதிகபட்சமாக 120 புள்ளிகள் என்பதால், கணக்கிடும் முறை ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் அணிகளுக்கு பாதகமாக அமைந்தது.

ஐசிசி டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் 9 முன்னணி அணிகளுக்கு இடையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற தொடரை அறிமுகம் செய்தது.

முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019 முதல் 2021 வரை நடைபெற்றது. இதில் முதல் இரண்டு இடங்களை பிடித்த இந்தியா, நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது.

ஐசிசி இரு நாடுகளுக்கு இடையில் நடைபெறும் தொடருக்கு அதிகபட்சமாக 120 புள்ளிகள் வழங்கியது. இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடினால், ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு 60 புள்ளிகள் கிடைக்கும்.
 
அதேவேளையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடினால், ஒரு போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு 24 புள்ளிகளே கிடைக்கும். இதனால் அதிக போட்டிகளில் விளையாடும் அணிகளுக்கு புள்ளிகள் வழங்கும் விதிமுறை பாதகமாக இருந்தது.

இதனால் 2021-23 வரையிலான சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டிக்கான புள்ளிகள் வழங்கும் முறையில் ஐசிசி மாற்றம் கொண்டு வந்துள்ளது.

தற்போது இரண்டு போட்டிகள், ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக இருந்தாலும் பரவாயில்லை. ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் 12 புள்ளிகள், போட்டி டையில் முடிந்தால் இரு அணிகளுக்கும் தலா 6 புள்ளிகள், டிரா ஆனால் இரு அணிகளுக்கும் தலா 4 புள்ளிகள் வழங்கப்படும். தோல்வியடைந்தால் புள்ளிகள் கிடையாது. வெற்றிபெறும் அணிக்கு 100 சதவீத புள்ளிகள், டை ஆனால் தலா 50 சதவீத புள்ளிகள், டிரா ஆனால் 33 சதவீத புள்ளிகள் என்ற அடிப்படையில் பிரித்து கொடுக்கப்படும்.

9 அணிகள் தலா ஆறு டெஸ்ட் தொடர்களில் 2021-23 வரையிலான காலஇடைவெளியில் விளையாட இருக்கின்றன. முதல் தொடர் இங்கிலாந்து- இந்தியா இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட தொடராக நடக்க இருக்கிறது. மார்ச் 2023-க்கும் அனைத்து தொடர்களும் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.