பிறந்தநாள் விருந்துபசாரத்தை நடத்துவதற்கான வசதிகளை வழங்கிய ஐந்து நட்சத்திர விருந்தகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை!
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பிறந்தநாள் விருந்துபசாரத்தை நடத்துவதற்கான வசதிகளை வழங்கிய கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர விருந்தகத்தின் முகாமைத்துவத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் விதிகளை மீறி, விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்த குற்றச்சாட்டில் நேற்று கைதுசெய்யப்பட்ட, நிகழ்வுகள் ஏற்பாட்டாளர் சந்திமால் ஜயசிங்க மற்றும் நடிகை பியுமி ஹன்சமாலி ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விருந்துபசாரத்தில் பங்கேற்றிருந்த, மேலும், 20 முதல் 25 பேர் வரையில், கைதுசெய்யப்பட உள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அவர்களில் 12 பேர் வரையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.