கீழே விழுந்த வயோதிபரை கொடூரமாக இழுத்துச்சென்ற நபர்! (காணொளி)
மொரட்டுவை எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மொரட்டுவை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வயோதிபரை நபர் ஒருவர் சித்திரவதை செய்து இழுத்துச்செல்லும் காட்சிகள் குறித்த எரிபொருள் நிலையத்தின் சிசிரீவி கெமராவில் பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது முச்சக்கர வண்டி ஒன்று மேற்படி எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு சென்றுள்ளது.
இதன்போது எரிபொருள் நிலையத்திற்கு செலுத்துவதற்காக அம்முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரிடம் அதன் சாரதி பணம் கோரியுள்ளார்.
எனினும் முச்சக்கர வண்டியில் இருந்த பயணிகள் இருவரும் (முதியவரும்,இளைஞரும்) தம்மிடம் பணம் இல்லை என தெரிவித்தனர்.
இதனையடுத்து அவர்கள் இருவரையும் முச்சக்கர வண்டியில் இருந்து அதன் சாரதி இறக்கிவிட்டுள்ளார்.
எனினும் அதிலிருந்த வயோதிபர் முழுவதுமாக இறங்குவதற்கு முன்னதாக சாரதி முச்சக்கர வண்டியை செலுத்தியதால் அவ்வயோதிபர் கீழே விழுந்துள்ளார்.
இதனையடுத்து முச்சக்கரவண்டி புறப்பட்டு சென்றுள்ளது.
அதன் பின்னர் குறித்த வயோதிபரை அவருடன் வந்த மற்றைய நபர் தரையில் கொடூரமாக இழுத்துச்சென்று எரிபொருள் நிலையத்துக்கு அருகில் விட்டுச்சென்றுள்ளார்.
சிறிது நேரம் கழித்து குறித்த வயோதிபர் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளமை சிசிரீவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மொரட்டுவை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.