
மகிந்த அழைப்பு விடுத்தும் இம்ரான் கானின் விருந்தை புறக்கணித்த முஸ்லிம் எம்பிக்கள்
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு வழங்கப்பட்ட இரவு விருந்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டபோதிலும் அ்ந்த கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஏற்பாட்டில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை அலரி மாளிகையில் இந்த இரவு நேர விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், ஆளும் தரப்பைச் சேர்ந்த முஸ்லிம் எம்.பிக்கள், மற்றும் சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன உட்பட வர்த்த சமுகம் ஒன்றும் அழைக்கப்பட்டிருந்தது.
அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் ஆளும் கட்சியின் முஸ்லிம் எம்.பிக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர், ரனில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர், சஜித் பிரேமதாச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் எம். ஏ. சுமந்திரன் எம்.பி., ஆகியோர் பங்கேற்றனர்.
எனினும் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த இஷாக் ரஹ்மான், மற்றும் முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த எம்.எஸ் தௌபீக், ஹரீஸ், பைசல் காசிம், சநீர் அகமட், மற்றும் அகில இலங்கை முஸ்லிம் மக்கள் காங்கிரஸை சேர்ந்த எஸ்.எம்.எம். முஷாரப் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.
இதேவேளை, ஜே.வி.பி தலைவர் அனுர குமார திசாநாயக்க மற்றும் கட்சியைச் சேர்ந்த மற்ற எம்.பி.க்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருந்தில் கலந்து கொண்ட முஸ்லிம் அரசியல் தலைவர்களும் புகழ்பெற்ற முஸ்லீம் தொழிலதிபர்களும் பாகிஸ்தான் பிரதமரிடம் ஆசியாவின் மிக சக்திவாய்ந்த முஸ்லிம் தலைவர் என்று கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.