ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கை தொடர்பான மீளாய்வு குழு இரண்டாவது நாளாக மீண்டும் கூடியது
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு இன்று இரண்டாவது நாளாகவும் ஒன்று கூடியது.
ஜனாதிபதி செயலகத்தில் அதன் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை நாளையதினம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதற்கான வன்பிரதிகளை உடன்டியாக தயாரிக்குமாறு, சபாநாயகர் நாடாளுமன்ற நிர்வாகக்குழுவினை அறிவுறுத்தியுள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதலை தடுப்பதற்கு தவறியமைக்காக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் காவற்துறை மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோ ஆகியோருடன், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்ன, முன்னாள் தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானி சிசிர மெண்டிஸ் உள்ளிட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வழிகள் உள்ளனவா? என்பதை ஆராயுமாறு இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த அறிக்கை தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சி ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், இந்த தாக்குதல் குறித்த முன்கூட்டிய தகவல் எதுவும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு தெரியாது என்று, விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர், பதில் ராஜாங்க அமைச்சராகவேனும் நியமிக்கப்படாதிருந்தமையால், அவரையும் இந்த விடயத்தில் பொறுப்புக்கூற செய்ய முடியும் என்றும் ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.