உலக நாடுகளின் கொவிட் தொற்றாளர்கள் தரப்படுத்தலில் இலங்கை 88வது இடத்திற்கு முன்னகர்வு
நாட்டில் நேற்றைய தினம் 492 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானமையை அடுத்து தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 81,000ஐக் கடந்துள்ளது.
இதற்கமைய இலங்கையில் இதுவரையில் 81,009 கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடைய 477 பேரும், சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 15 பேரும் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி மினுவாங்கொடை, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொத்தணியில் தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 76,905 ஆக அதிகரித்துள்ளது.
இதேவளை அதிகளவான கொவிட் 19 நோயாளர்கள் கண்டறியப்பட்ட உலக நாடுகளின் தரப்படுத்தலில் இலங்கை 88வது இடத்திற்கு முன்னகர்ந்துள்ளது.
அத்தோடு 4,714 கொவிட் 19 நோயாளர்கள் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.