சித்திரைப்புத்தாண்டுக்கு முன்னர் மேல் மாகாணத்தில் பெரும்பாலானோருக்கு கொரோனா தடுப்பூசி

சித்திரைப்புத்தாண்டுக்கு முன்னர் மேல் மாகாணத்தில் பெரும்பாலானோருக்கு கொரோனா தடுப்பூசி

சித்திரைப்புத்தாண்டுக்கு முன்னர் மேல் மாகாணத்தில் பெரும்பாலானோருக்கு கொவிட்-19 தடுப்பூசிகளை செலுத்துவதற்கு தீர்மானித்திருப்பதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

பண்டிகை காலத்தின்போது மேல் மாகாணத்தில் இருந்து தமது சொந்த ஊர்களுக்கு செல்வோரின் மூலமாக ஏனைய மாகாணங்களுக்கும் இந்த நோய் பரவக்கூடிய அபாய நிலை ஓரளவு உள்ளது

இந்த நிலைமையை கவனத்திற்கொண்டு, மேல் மாகாணத்தில் மிக விரைவில் அதிகளவானோருக்கு தடுப்பூசிகளை செலுத்தி, பாதுகாப்பை உச்சபட்சமாக பெற்றுக்கொள்ள இயலுமாக இருக்கும் என்றார்.

இந்த நிலையில் புற்றுநோய் மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை, இந்த தடுப்பூசி வழங்குவதற்காக எவ்வாறு தேர்வு செய்வீர்கள் என்று ஊடகவியலாளரினால் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், குறித்த பிரதேசங்களில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள வருமாறு அறிவித்தல் விடுப்பதாக தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி பெற்றுக் கொள்ள வருபவர்கள் தங்களுடைய நோய் நிலைமைகள் தொடர்பில் தடுப்பூசி பெற்றுக் கொள்வதற்கு முன்னதாக அறியப்படுத்த வேண்டும்.

அதேநேரம், எவராவது ஒருவருக்கு தடுப்பூசி பெற்றுக்கொள்வது தொடர்பில் ஏதாவது பிரச்சினை இருக்குமாயின், பிரதேச சுகாதார பரிசோதகரை சந்தித்து அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு அவர்களுக்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

சில நபர்கள் இந்த திட்டங்களுக்கு புறம்பாக, பல்வேறு அழுத்தங்களை பிரயோகிக்கின்றனர்.சிபாரிசுகளை செய்தோ, பதவி நிலைகளை பயன்படுத்தியோ அல்லது தடுப்பூசி வழங்கும் மையங்களுக்கு சென்று, தங்களுக்கு தடுப்பூசிகளை வழங்குமாறோ அல்லது தங்களுடன் வருபவர்களுக்கு தடுப்பூசியில் வழங்குமாறோ கூறும் நிலை உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எவருக்கும் தடுப்பூசியை செலுத்தாமல் இருப்பதற்கான எதிர்பார்ப்பு இல்லை.

எனவே, அனைவரும் தங்களுக்கான சந்தர்ப்பம் கிடைக்கும் வரையில் பொறுமையுடன் காத்திருக்குமாறு கோருவதாக வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா மரணங்கள் தொடர்பான தரவுகள் பரஸ்பர முரண்பாட்டுடன் வெளியிடப்படுவதாக கூறப்படுகின்றது என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த வைத்தியரை ஹேமந்த ஹேரத், குறித்த நோயாளர்கள் அனைவரையும் அதில் பட்டியல் படுத்துவதற்கு முன்னர், ஆழமான மீளாய்வுகளின் பின்னரே கொரோனா மரணமா? இல்லையா? என்பது தீர்மானிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அந்த நோயாளிக்கு சிகிச்சையளித்த வைத்தியர், சட்ட வைத்திய அதிகாரி, பிரதேச சுகாதார பரிசோதகர் உள்ளிட்ட அனைவரின் தகவல்களை ஒன்று திரட்டியே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதைவிடுத்து நினைத்தாற்போல் செய்யும் நடவடிக்கை இதுவல்ல.

எனவே, ஏதாவது ஒரிடத்தில் இந்த தகவல்கள் மறைக்கப்படுமாயின், அவ்வாறான ஒரு நிலைக்கு ஒருபோதும் இடமில்லை என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.