மனித உரிமைகள் பேரவை மாநாடு இன்று பிற்பகல் ஆரம்பம்; குட்டேரஸ், மிச்செல் பெச்லேட் தொடக்க அமர்வில் உரை!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது மாநாட்டின் பிரதான அமர்வு இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.
எதிர்வரும் இரண்டு தினங்களுக்கு 130 நாடுகளின் பிரதிநிதிகள் தமது நாடுகளில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துரைக்கவுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் என்டோனியோ குட்டேரஸ், ஐக்கிய நாடுகள் பொது சபையின் தலைவர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பெச்லேட் ஆகியோர் தொடக்க அமர்வில் உரையாற்றவுள்ளனர்.
இந்தமுறை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது மாநாடு கொரோனா பரவல் காரணமாக தொலைகாணொளி ஊடாக இடம்பெறவுள்ளது.
தொலைகாணொளி ஊடாக இந்த மாநாடு இடம்பெறவுள்ளமை இதுவே முதற்தடவையாகும்.
இந்த முறை அமர்வின் போது இலங்கை தொடர்பில் யோசனைகள் முன்வைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு புதிய யோசனையை இந்த முறை கூட்டத்தொடரில் முன்வைப்பதாக இலங்கை தொடர்பான யோசனைக்கு இணை அனுசரணை வழங்கியுள்ள 6 நாடுகள் அறிவித்துள்ளன.