கொவிட் தடுப்பூசியை எவ்வாறு பெற்றுக்கொள்வது? வெளியானது விபரம்

கொவிட் தடுப்பூசியை எவ்வாறு பெற்றுக்கொள்வது? வெளியானது விபரம்

கொவிட் தொற்று அதிகளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோய் மற்றும் கொவிட் தடுப்பு இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

தற்போது இந்த தடுப்பூசி அதிக பாதிப்புக்களை கொண்ட கொழும்பு மற்றும் கம்பகா மாவட்ட மக்களுக்கே செலுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

அதிக எண்ணிக்கையிலான கொவிட் நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகள் பதிவாவதால் இரு மாவட்டங்களும் அதிக பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளன.

தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கு குறிப்பிட்ட செயல்முறை அல்லது அளவு கோல்கள் எதுவும் இல்லை.

தடுப்பூசியை பெற்றுக்கொள்ள விரும்பினால் தமது பகுதி பொதுச்சுகாதார மருத்துவ அதிகாரியை மக்கள் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு தொடர்பு கொண்டால் தடுப்பூசியைப் பெறுவதற்கான தகுதி குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்படும் என்றும், 30 வயதிலிருந்து எவரும் அந்தந்த பொது சுகாதார மருத்துவ அதிகாரியிடம் விசாரித்து தடுப்பூசி பெறலாம் என்றும் அவர் கூறினார்.

தடுப்பூசி செயல்முறையை செயற்படுத்த தற்போது பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட இடங்களுக்கு பொறுப்பான சில பொது சுகாதார மருத்துவ அதிகாரிகளுக்கே அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் விளக்கினார்.

தற்போது கையிருப்பில் உள்ள கொவிட் தடுப்பூசி அளவுகள் கிடைப்பதைப் பொறுத்து வரையறுக்கப்பட்ட தடுப்பூசி செயல்முறை மேற்கொள்ளப்படுகிறது எனத் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இலங்கை பெறும் தடுப்பூசி அளவுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து தடுப்பூசி செயல்முறை ஏனைய பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

2021 மார்ச் 1 ஆம் திகதி இலங்கைக்கு கொவிட் தடுப்பூசியின் மற்றொரு தொகுதி கிடைக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

கிடைக்கப்பெறவுள்ள புதிய தொகுதி அளவுகளின் அடிப்படையில் தடுப்பூசி திட்டம் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என மேலும் அவர் தெரிவித்தார்.