எந்தவொரு வெளிநாட்டுக் கட்சிக்கும் இலங்கைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு சட்டரீதியான வாய்ப்புக்கள் இல்லை

எந்தவொரு வெளிநாட்டுக் கட்சிக்கும் இலங்கைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு சட்டரீதியான வாய்ப்புக்கள் இல்லை

பாரதிய ஜனதா கட்சி அல்லது வேறு ஒரு வெளிநாட்டு கட்சிக்கும் இலங்கையில் பதிவினை பெறுவதற்கும் அல்லது தேர்தலில் போட்டியிடுவதற்கும் சட்டரீதியான வாய்ப்புக்கள் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அந்த ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா இதனை தெரிவித்துள்ளார்.

1981 ஆம் ஆண்டு முதலாம் இலக்க நாடாளுமன்ற சட்டத்துடன் அரசியலமைப்புக்கு அமைய அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு இலங்கையிலும் நேபாளத்திலும், பாரதீய ஜனதா கட்சி அலுவலகத்தை ஸ்தாபிக்கும் திட்டம் உள்ளது என திரிபுரா மாநில முதலமைச்சர் பிப்லாப் டெப் (Biplab deb) தெரிவித்துள்ளார்.

திரிபுராவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போதைய உள்துறை அமைச்சரான அமித் ஷா, பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக இருந்தபோது அகர்தலா மாநில அரச விருந்தினர் மாளிகையில் பல்வேறு தலைவர்களுடன் கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது, இந்திய மாநிலங்கள் தவிர இலங்கை மற்றும் நேபாளத்திலும் ஆட்சியை விரிவுபடுத்த கட்சி திட்டமிட்டு வருவதாக அமித் ஷா கூறியதாக பிப்லாப் டெப் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், திரிபுரா முதலமைச்சர் வெளியிட்டுள்ள இந்த கருத்து தொடர்பில் பல்வேறு தரப்பினர் தங்களது அதிருப்தியினை வெளியிட்டுள்ளனர்.

இறையாண்மை கொண்ட இலங்கை மற்றும் நேபாளம் நாடுகளுக்கு எதிராக ஜனநாயக விரோத செயற்பாடுகள் மற்றும் ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடும் செயல் இது எனவும் இதனால் இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை பாதிக்கப்படும் என்றும் பல்வேறு கட்சிகள் தமது அதிருப்தியினை வெளியிட்டுள்ளன.

இதேவேளை, அரசியலமைப்புக்கு அமைய இந்தியாவின் பெயரில் இலங்கையினுள் அரசியல் கட்சி ஒன்றை உருவாக்குவதற்கான வாய்ப்பு இல்லை என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி பிரதீபா மஹனாம ஹேவா தெரிவித்துள்ளார்.

இந்த கருத்து வெற்றியளிக்கும் என தாம் நம்பவில்லை.

அண்மையில் இடம்பெற்ற சில சம்பவங்கள் தொடர்பில் சில அழுத்தங்களை பிரயோகிப்பதற்கே இவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.

நாட்டின் அரசியலமைப்பு மற்றும் ஒற்றையாட்சியை பின்பற்றியே அனைத்து நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.

இந்தநிலையில் கட்சியொன்றை ஆரம்பிப்பதற்கு இந்தியா முயற்சிக்குமானால் அது சாத்தியமற்ற விடயமாகும்.

எனினும் வெளிநாட்டு கட்சியொன்றின் கொள்கைகளை இலங்கையில் செயற்படும் கட்சி ஒன்றின் மூலம் அமுல்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது.

இலங்கையில் உள்ள கட்சியொன்றை கொள்வனவு செய்து தமது கொள்கைகளை அமுல்படுத்துவதற்கு அவர்களால் முடியும்.

எனினும் வாக்காளர்களே அது தொடர்பிலான இறுதி தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு வெளிநாட்டு கட்சி ஒன்று இலங்கையில் செயற்படும் கட்சியை கொள்வனவு செய்திருந்தால் அந்த கட்சிக்கான நிதி எங்கிருந்து வருகிறது என்பதை இலங்கை சட்டத்தின் கீழ் ஆராய வேண்டும் எனவும் சட்டத்தரணி பிரதீபா மஹனாம ஹேவா சுட்டிக்காட்டியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் இந்த நிலைப்பாடு தொடர்பில் ஆராயமல் கருத்து வெளியிட முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார்