
இறந்து பிறந்துள்ளதாக கூறி புதைக்கப்பட்ட குழந்தை - தாய் மீது வழக்கு தாக்கல்..!
பெண் ஒருவர் குழந்தையை வீட்டில் பிரசவித்து, அந்த குழந்தை உயிரிழந்ததாக கூறி மயானத்தில் புதைத்த சம்பவம் ஒன்று காத்தான்குடி- பூநொச்சிமுனை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக காத்தான்குடி காவல்துறையினர் நீதிமன்றிலில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இதனால் குறித்த குழந்தையின் சடலம் இன்று திங்கட்கிழமை (08) நீதவான் முன்னிலையில் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஓப்படைத்துள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளையின் தாயார் கருவுற்றுள்ள நிலையில் கடந்த 2ம் திகதி குழந்தை ஒன்றை வீட்டில் பிரசவித்துள்ளார்.
பின்னர் அந்த தாய் குழந்தை இறந்து பிறந்துள்ளதாக அப்பகுதி பள்ளிவாசலுக்கு தெரிவித்து குழந்தையின் சடலத்தை பூநொச்சிமுனை மயானத்தில் புதைத்துள்ளார்.
இதன் பின்னர் குறித்த தாய் சுகவீனமுற்ற நிலையில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து அவர் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது
இந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்ற தாய்க்கு எதிராக காவல்துறையினர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ததையடுத்து குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.