
நாளை கூடுகின்றது நாடாளுமன்றம்! மேற்கொள்ளப்படவுள்ள விசேட நடவடிக்கை
நாளையதினம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படுமென நாடாளுமன்ற ஊடக பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் காலை 9.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை நடைபெறவிருக்கும் எழுந்த மானமான பி.சி.ஆர் பரிசோதனையில் கலந்து கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் சார்ஜன்ட் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.
எழுந்தமானமான சோதனைகள் வாரத்திற்கு ஒரு முறை நாடாளுமன்ற அமர்வு வாரங்களிலும், அமர்வு இடம்பெறாத வாரங்களிலும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உதவியுடன் நடத்தப்படும்.
ஜனவரி 13 முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற பணியாளர்கள் மீது எழுந்தமானமான பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நரேந்திர பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.
ஜனவரி 25 ஆம் திகதி சோதனை செய்யப்பட்ட 190 பேரைக் கொண்டவர்களுக்கான முடிவுகள் அனைத்தும் எதிர்மறையாக வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுவரை மொத்தம் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
தயாசிறி ஜயசேகர வைரஸ் தொற்றுக்குள்ளான முதல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (எஸ்.எல்.எம்.சி) தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கர ஆகியோர் பின்னர் கொவிட் தொற்றுக்கு இலக்கானவர்களாவர்.
ராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த டி சில்வா, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, பொதுஜன பெரமுன (எஸ்.எல்.பி.பி) நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தா யாப்பா பண்டார ஆகியோர் பின்னர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ வைரஸ் பாதிப்புக்குள்ளான ஏழாவது நாடாளுமன்ற உறுப்பினராவார்.
இதேவேளை தென் மாகாண ஆளுநர் பேராசிரியர் வில்லி கமகே மற்றும் முன்னாள் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்கு பண்டார ஆகியோர் இறுதியாக தொற்றுக்கு இலக்கானவர்களாவர்.