சுதந்திரதின நிகழ்வில் பங்கேற்ற சிவில் படை வீரர்கள் எழுவருக்கு கொரோனா
கடந்த 04 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்ற சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஏழு படை வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கல்கிரியகம பயிற்சி மையத்தைச் சேர்ந்த படையினருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
திடீரென ஏற்பட்ட நோய் காரணமாக ஏழு படைவீரர்கள் தம்புள்ள ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட விரைவான அன்டிஜன் பரிசோதனையில் அறுவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பலகல்ல சுகாதார அலுவலர் மருத்துவர் நரேந்திர பிரேமரத்ன தெரிவித்தார்.
அத்துடன் ஏனைய 50 சிப்பாய்கள் கொரோனா தொற்று அறிகுறியை அடுத்து குறித்த பயிற்சி மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு நேற்றையதினம் பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த 50 பேரில் 10 சிப்பாய்களுக்கு சுவாசக்கோளாறு காரணமாக அநுராதபுர மற்றும் தம்புள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அனுமதிக்கப்பட்ட சிப்பாய் ஒருவருக்கு நடத்தப்பட்ட விரைவான அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கல்கிரியகம பயிற்சி மையத்தைச் சேர்ந்த 140 படையினர் சுதந்திர தின கொண்டாட்டங்களில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.