பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளும் நிறுவனங்களின் அதிகாரிகளுக்கும் கொரோனா..!

பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளும் நிறுவனங்களின் அதிகாரிகளுக்கும் கொரோனா..!

நாட்டில் நேற்றைய தினம் 726 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

அவர்கள் அனைவரும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையர்கள் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 68 ஆயிரத்து 576 ஆக அதிகரித்துள்ளது.

பேலியகொடை மற்றும் திவுலபிட்டி கொத்தணிகளில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 64 ஆயிரத்து 575 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட் 19 தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 62 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

நேற்றைய தினம் மேலும் ஆயிரத்து 133 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்ததையடுத்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொவிட் 19 தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 62 ஆயிரத்து 594 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், 5 ஆயிரத்து 631 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இதேவேளை, வவுனியா காவல்துறை நிலையத்தில் சேவையாற்றும் மூன்று காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆறுமுகம் கேதீஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் 413 பேரின் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த மூன்று பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளும் பணிகளுக்கு தடை ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளும் நிறுவனங்களில் உள்ள சில அதிகாரிகளுக்கும், சுகாதாரத்துறையை சார்ந்த பலருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானமை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொவிட்-19 தொற்றுறுதியானவர்களை சிகிச்சை உட்படுத்தும் முறைமை மற்றும் தனிமைப்படுத்தல் விடயங்கள் என்பவற்றில் திருத்தங்கள் அடங்கிய பரிந்துரைகளை அடுத்த வாரம் நடுப்பகுதியில் சுகாதார அமைச்சிடம் கையளிக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் மத்திய குழு உறுப்பினரும், ஊடகக் குழு உறுப்பினருமான வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார்.