
போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம் - அஜித் ரோஹண
இளம் வயதினர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாவதை தடுப்பதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை செயற்படுத்த தீர்மானித்திருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சும், கல்வி அமைச்சும் ஒன்றிணைந்து இத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இளம் வயதினர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாவதை தடுப்பதற்கான திட்டங்களை தயாரிப்பது தொடர்பில் நேற்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
நாட்டில் தற்போது 90 ஆயிரம் தொடக்கம் ஒரு இலட்சம் பேர் வரை போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளனர்.
இவர்களின் தொகை படிப்படியாக அதிகரித்துச் செல்வதையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
இந்த நிலைமைக்கு பிரதான காரணம் இளம் வயதினர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி வருகின்றமையே.
இளம் வயதினரை போதைப்பொருள் பாவனையிலிருந்து மீட்பதென்றால், பாடசாலை மட்டத்திலிருந்தே அவர்களுக்கு போதைப்பொருள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்று கலந்துரையாடப்பட்டது.
அதற்கமைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சும், கல்வி அமைச்சும் இணைந்து பாடசாலை மட்டத்தில் ஒன்றிணைந்த வேலைத்திட்டமொன்றை செயற்படுத்த முடிவெடுத்துள்ளது.
இந்த செயற்பாடுகளுக்கு சாரணியர் அமைப்பினரும், இலங்கை செஞ்சிலுவை அமைப்பினரும் மற்றும் தேசிய மாணவர் படையணியும் ஒத்துழைப்பு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர் என்றார்.