காலி துறைமுகத்தின் 7 ஏக்கர் நிலப்பரப்பு 30 வருட குத்தகைக்கு...!

காலி துறைமுகத்தின் 7 ஏக்கர் நிலப்பரப்பு 30 வருட குத்தகைக்கு...!

இலங்கை துறைமுக அதிகாரசபையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள கிழக்கு முனையம் எதிர்வரும் 2023 ஆண்டிற்குள் முழுமையாக அபிவிருத்தி செய்யப்படும் என அந்த அதிகார சபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, காலி துறைமுகத்தின் சுமார் 7 ஏக்கர் நிலப்பரப்பை தனியார் பிரிவிற்கு 30 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

காலி துறைமுகத்தில் சிறிய படகு தளத்தை செயற்படுத்துவதற்காக இந்த பகுதியை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் எமது செய்தி சேவை, துறைமுக அதிகாரசபையின் தொழில்நுட்ப பிரிவின் பணிப்பாளர் சுசந்த அபேசிறிவர்தனவை தொடர்பு கொண்டு வினவியது.

இதற்கு பதில் வழங்கிய அவர், நாட்டின் சுற்றுலா தொழிற்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் சிறிய படகு தளத்தை செயற்படுவத்துவதற்காக தனியார் பிரிவிற்கு குத்தகைக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.

எனினும் துறைமுகத்தின் ஏனைய நடவடிக்கைகளுக்கு இதனால் எந்தவித அழுத்தங்களும் ஏற்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம் திருகோணமலை துறைமுகத்திலும் சுற்றுலா தொழிற்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் இவ்வாறு தனியார் பிரிவுடன் இணைந்து எதிர்காலத்தில் செயற்படவுள்ளதாக துறைமுக அதிகாரசபையின் தொழில்நுட்ப பிரிவின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள துறைமுக பொது சேவை சங்கத்தின் பிரதான செயலாளர், சுற்றுலா தொழில்துறை ஊக்குவிப்பு நடவடிக்கைகளை தனியார் துறைக்கு வழங்காது, துறைமுக அதிகாரசபையின் கீழ் அதனை செயற்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஏனைய தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி இது குறித்த அடுத்த கட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்