
நாட்டில் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 64 ஆயிரத்தை கடந்துள்ளது.
நேற்றைய தினம் மேலும் 864 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதை அடுத்து இந்த எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.
இதன்படி நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 64 ஆயிரத்து 157 ஆக அதிகரித்துள்ளது.
பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடைய 827 பேருக்கும், சிறைச்சாலைகள் கொத்தணியுடன் தொடர்புடைய 10 பேருக்கும் நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றுறுதியானதாக இராணுவ தளபதி ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, முக்கொத்தணிகளில் இதுவரை பதிவான கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 60 ஆயிரத்து 174 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 27 பேருக்கும் நேற்றைய தினம் கொவிட் 19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து வருகைத்தந்த 17 பேரும்,கொரியாவில் இருந்து வந்த 10 பேரும் அவர்களில் அடங்குகின்றனர்.
அதேநேரம், 6 ஆயிரத்து 682 பேர் தொடர்ந்தும் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆயிரத்தை கடந்துள்ளது.
நேற்று மேலும் 882 பேர் குணமடைந்து சிகிச்சை மையங்களில் இருந்து வெளியேறியதற்கு அமைய இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதன்படி நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 57 ஆயிரத்து 159 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 245 பேருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளில்
வடமாகாணத்தில் 3 போருக்கும், தனிமைப்படுத்தல் மையங்களை சேர்ந்த 12 பேருக்கும் கொவிட் 19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மருத்துவமனையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி இதனை தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும், மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 2 பேரும், வெள்ளாங்குளம் தனிமைப்படுத்தல் மையத்தில் 10 பேரும், தம்பகொளப்பட்டினம் தனிமைப்படுத்தல் மையத்தில் ஒருவரும், கோப்பாய் சிகிச்சை நிலையத்தில் ஒருவரும் அவர்களில் அடங்குவதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தனிமைப்படுத்தபட்டிருந்த சில பகுதிகள் இன்று அதிகாலை 5 மணியுடன் விடுவிக்கப்பட்டுள்ளன.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி நாரஹேண்பிட்டி காவல்துறை அதிகார பிரிவில் 100 ஆம் தோட்டம், துறைமுக காவல்துறை அதிகார பிரிவில் கீழ் புனித எண்ருஸ் பிரதேசம், மேல் எண்ருஸ் பிரதேசம், என்ருஸ் வீதி ஆகியன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் பேலியகொடை காவல்துறை அதிகார பிரிவில் கங்கபட கிராம சேவகர் பிரிவில் 90ஆம் தோட்டமும் இன்று அதிகாலை 5 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன