நாட்டில் நேற்றைய தினமும் 800 பேருக்கு கொரோனா...!

நாட்டில் நேற்றைய தினமும் 800 பேருக்கு கொரோனா...!

நாட்டில் நேற்றைய தினமும் 800 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

நேற்றைய தினம் 859 பேருக்கு தொற்றுறுதியானமையை அடுத்து தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்து 445 ஆக அதிகரித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று தொற்றுறுதியானவர்களில் 839 பேர் பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடையவர்கள்.

அத்துடன் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 20 பேருக்கும் நேற்று தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட்-19 தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 55,000 ஐ கடந்ததுள்ளது.

மேலும் 963 பேர் நேற்று குணமடைந்தனர்.

தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் நாளாந்த கொரோனா நிலவர அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 55 ஆயிரத்து 398 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 7 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அவர்களில் 3 பேர் மன்னார் நானாட்டானைச் சேர்ந்த சுயதனிமைப்படுத்தபட்டவர்கள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த வியாபாரி ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டார்.