
கொவிட்-19 தடுப்பூசிகள் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவைப்பு
இந்தியாவினால் இலங்கைக்கு தருவிக்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகளை 25 மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்திய அரசாங்கம் வழங்கிய கொவிட் தடுப்பூசிகளின் முதல் தொகுதி இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேவினால் இன்று முற்பகல் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்வைத்த வேண்டுகோளின் பேரில் தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட அஸ்ட்ராஷெனெகா கொவிஷீல்ட் தடுப்பூசி சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.
5 லட்சம் தடுப்பூசிகளுடன் இந்திய விமான சேவைக்கு சொந்தமான ஏ.ஐ 281 ரக விமானம் இன்று முற்பகல் 11.45 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
விமானத்தின் விசேட குளிரூட்டியில் களஞ்சியப்படுத்தப்பட்டு கொண்டுவரப்பட்ட தடுப்பூசியின் எடை ஆயிரத்து 323 கிலோ கிராமாகும்.
இந்த தடுப்பூசிகள் விமான நிலைய வளாகத்தில் உள்ள குளிரூட்டியில் களஞ்சியப்படுத்தப்பட்டு குளிரூட்டப்பட்ட வாகனங்களின் மூலம் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசிகள் 2 முதல் 8 க்கு இடைப்பட்ட டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் மேல் மாகாணத்தின் 6 முக்கிய வைத்தியசாலைகளில் நாளை முதல் ஆரம்பிக்கப்படும்.
கொவிட் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் சுகாதாரப் பணியாளர்கள், ஒரு லட்சத்து 20 ஆயிரம் முப்படையினர், காவல்துறையினர் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையில் உள்ளவர்களுக்கு முதலில் தடுப்பூசியை செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் விதமாக சீன அரசாங்கமும் 3 லட்சம் தடுப்பூசிகளை வழங்கவுள்ளது என கொவிட் தடுப்பூசி கொள்முதல் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவரும் ஜனாதிபதியின் தலைமை ஆலோசகருமான லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்திக்கொள்வது தனிநபர்களின் சுயாதீனமான முடிவாகும்.
அதை விரும்பாதவர்கள் ஏற்றிக்கொள்ளாதிருக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று கிடைக்கப்பெற்ற கொவிட் தடுப்பூசிகளின் ஒருதொகுதி யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாளை மறுதினம் முதல் நாட்டின் சகல மாவட்டங்களுக்குமான தொகுதிகள் விநியோகித்து நிறைவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் நாளையதினம் கொழும்பு தேசிய வைத்தியசாலை, தென்கொழும்பு போதனா வைத்தியசாலை, வட கொழும்பு போதனா வைத்தியசாலை, ஐ.டி.எச். வைத்தியசாலை, முல்லேரியா மற்றும் ஹோமாகம ஆதார வைத்தியசாலைகள் ஆகியவற்றில் நாளையதினம் கொவிட் 19 தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.
தொற்றுநோய் விஞ்ஞானப்பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் உலக சுகாதார ஸ்தாபத்தினால் இலங்கையின் சனத்தொகையில் 20 சதவீதமானவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தடுப்பூசிகள் அடுத்தமாத இறுதிக்குள் இலங்கைக்கு கிடைக்கப்பெறும் என்றும் அவர் தெரிவிக்கப்பட்டுள்ளது.