சுதந்திர தின நிகழ்விற்காக மட்டுப்படுத்தப்பட்ட வாகனப் போக்குவரத்து

சுதந்திர தின நிகழ்விற்காக மட்டுப்படுத்தப்பட்ட வாகனப் போக்குவரத்து

73 ஆவது சுதந்திரதின நிகழ்வு பெப்ரவரி 4 ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்துக்கு அருகில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான ஒத்திகை ஜனவரி மாதம் 30, 31 ஆம் திகதிகளிலும் பிப்ரவரி மாதம் 1, 2 மற்றும் 3 ஆம் திகதிகளிலும் குறித்த பகுதியில் இடம்பெற உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஒத்திகை இடம்பெறும் நாட்களில் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையான காலப்பகுதியில், பிப்ரவரி 4 ஆம் திகதி காலை 4 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையான காலப் பகுதியிலும் கொழும்பு சுதந்திர சதுக்கம், நிதஹஸ் மாவத்தை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதற்கான மாற்று வீதிகள் தொடர்பான அறிவித்தல்கள் பாதையில் குறிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொரள்ள திசையிலிருந்து தாமரைத் தடாக சுற்றுவட்டத்தின் ஊடாக பயணிக்கும் வாகனங்கள் ஹோட்டன் பிளேஸ் திசையில் வருகைதந்து, விஜயராம மாவத்தையின் ஊடாக வோர்ட் பிளேஸிற்கு பயணிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

அப்பகுதியில் இருந்து வெளியேறுபர்களும் அதை பாதையினூடாக வெளியேற முடியும் என தெரிவித்த அவர் பௌத்தலோக மாவத்தையின் போக்குவரத்து வழமைபோன்று இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.