
தடுப்பூசிகளுடன் கட்டுநாயக்காவில் தரையிறங்கியது விமானம்
இலங்கைக்கு இந்தியா நன்கொடையாக வழங்கிய 05 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டு இந்திய சிறப்பு விமானம் இன்று முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இவ்வாறு வந்திறங்கிய தடுப்பூசி நாளை முதல் கொழும்பை சுற்றியுள்ள ஆறு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு செலுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பு தேசிய மருத்துவமனை, கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனை, கொழும்பு வடக்கு போதனா மருத்துவமனை, ஹோமாகம ஆதார வைத்தியசாலை, கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலை மற்றும் அங்கொடவில் உள்ள தேசிய தொற்று நோய்கள் நிறுவனம் (ஐடிஎச்) ஆகியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இந்த மருத்துவமனைகளில் சுமார் 25 சதவீத ஊழியர்களுக்கு திட்டத்தின் தொடக்கத்தில் தடுப்பூசி போடப்படும் என்று அவர் கூறினார்.
மீதமுள்ள ஊழியர்களுக்கு அடுத்த சில நாட்களில் தடுப்பூசி போடப்படும் என்று மேலும் தெரிவித்தார்.