
மன்னாரில் மேலும் ஒரு தொகுதியினருக்கு பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுப்பு
மன்னாரில் இன்று (புதன்கிழமை) காலை, மேலும் ஒரு தொகுதியினருக்கு பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் இணைந்து குறித்த பி.சி.ஆர்.பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
மன்னார் புதிய பேருந்து தரிப்பிடத்தில் வைத்து மன்னார் மாவட்ட தனியார் பேருந்து சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் மன்னார் பேருந்து தரிப்பிட பகுதியில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளின் சாரதிகள் மற்றும் பொலிஸார் ஆகியோருக்கு குறித்த பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளாத மன்னார் பேருந்து தரிப்பிட பகுதியில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளின் சாரதிகளை, நாளை முதல் சேவையில் ஈடுபட அனுமதி வழங்கப்படாது என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அறிவித்துள்ளது.
மன்னார் மாவட்டத்தில் இந்த மாதம் 1 ஆம் திகதி முதல் தற்போது வரை 142 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் மொத்தமாக 159 தொற்றாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 2 கொரோனா மரணங்களும் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.