எரிபொருள் நிரப்பும் போது விழிப்பாக செயற்படுங்கள்...!

எரிபொருள் நிரப்பும் போது விழிப்பாக செயற்படுங்கள்...!

எரிபொருள் விலையானது தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் வாடிக்கையாளர்கள் சூட்சமமான முறையில் ஏமாற்றப்படும் சம்பவம் ஒன்று இலங்கையில் பதிவாகியுள்ளது.

அம்பாந்தோட்டை - சூரியவெவ பகுதியில் இயங்கி வரும் எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர்கள் மூவரே இவ்வாறு வாடிக்கையாளர்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வந்துள்ளனர்.

1500 ரூபாய்க்கு எரிபொருள் நிரப்பும் வாடிக்கையாளர்களுக்கு 150 ரூபாய்க்கு எரிபொருளை நிரப்பி ஏமாற்றி வந்துள்ளனர்.

அதுமாத்திரமின்றி 10 லீற்றர் எரிபொருள் நிரப்ப வருபவர்களுக்கு ஒன்பதரை லீற்றர் மாத்திரமே எரிபொருள் நிரப்புகின்றனர்.

இந்த ஏமாற்று நடவடிக்கைகள் குறித்து அவதானித்த வாடிக்கையாளர் ஒருவர் குறித்த எரி பொருள் நிலைய முகாமையாளரிடம் முறையிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து அங்கு காணப்பட்ட சீ சீ ரீவி காணொளியினை பார்வையிட்டுள்ளனர்.

இதன்போது குறித்த சேவையாளர்கள் இவ்வாறு தொடர்ச்சியாக ஏமாற்றி வந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய மூவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு, சூரியவெவ பகுதியில் இயங்கும் மேலும் சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் இது போன்ற நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.